Monday, August 3, 2009

"மௌனப் போராட்டம்"


வீடே கோலாகலமாகவும் குதுகலமாகவும் இருந்தது. முதல் இரவுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்தாள் வினிதா. சுற்றிலும் தோழிகளின் கிண்டல் கேலி பேச்சுகள்.
ஏய், வினி! ரூம்ல போய் முதல்ல என்ன தெரியுமா செய்யுற?
என்ன செய்யணும்?
ஜன்னல் கதவு இருக்கு இல்ல அத சாத்திடு. ஏன்னா மாப்ள ஜன்னல் வழியா எங்கள பார்த்துட்டு நீ வேண்டாம் உன் தோழிகள் தான் வேணும்னு சொல்லிட போர்ர்ரார்ரு ஓகே வா.
இதை தோழிகளில் ஒருத்திக் கூற அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள். இப்படியே பேசிக்கொண்டு இருந்ததில் மணி ஒன்பது ஆகி இருந்தது.
ஏய் போதும் அவல கொண்டு போய் ரூம்ல விடுங்கடி. மாப்ள டென்ஷன் தாங்க முடியாம இவள வந்து குண்டு கட்டாத் தூக்கிட்டு போய்ட போகிறார் டி.
இப்படி மற்றொருத்திக் கூற மீண்டும் சிரிப்பலை.
வினிதா பால் சொம்புடன் உள்ளே வந்தாள். இவள் வந்ததுக் கூடத் தெரியாமல் கெளதம் சிகரெட் ஒன்றைப் புகைத்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்த படி உட்கார்ந்து இருந்தான்.
கெளதம் வந்து கையை பிடித்து மார்போடு அனைத்து அழைத்துச் செல்வான் என எதிர் பார்த்தாள். அவன் அப்படி செய்யாததால் ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு.
பால் சொம்பை கொண்டு போய் மேஜையின் மீது வைத்து விட்டு அவன் காலில் விழுந்து வணங்கினாள். அப்பொழுதுதான் சிந்தனை கலைந்தவனாக காலை வெடுக்கென்று இழுத்துக் கொண்டான். தோலைத் தொட்டு தூக்குவான் என்று எதிர் பார்த்தவளுக்கு அப்பொழுதும் ஏமாற்றம் தான்!
கட்டிலின் மேல் கிடந்த ஒரு தலையணை, போர்வை இரண்டையும் எடுத்துக் கொண்டு வேறு அறைக்கு சென்று விட்டான். அப்பொழுதுதான் அவளுக்கு அவன் செய்கை ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தது.
ஏன்? ஏன்? இப்படி நடந்து கொள்கிறான். நான் ஏதாவது தவறு செய்து விட்டேனோ? ஒரு சமயம் என்னை அவனுக்கு பிடிக்க வில்லையோ? பிடிக்க வில்லை என்றால் திருமணத்திற்கு முன்பாகவே சொல்லி இருக்கலாம் இல்லையா? ஒரு சமயம் திருமணத்தில் இஷ்டம் இல்லையோ? அவளிடம் குடி கொண்டிருந்த சந்தோழங்கள் அனைத்தும் அவன் செய்த செய்கையால் ஒரு நொடியில் காணாமல் போய் விட்டது.
ஒரு சமயம் உடல்நிலை சரியில்லாமல் இருக்குமோ? அப்படி இருந்தால் என்னிடம் நாசூக்காக சொல்லி இருக்கலாமே? ஆசைகளையும் கற்பனைகளையும் மூடிக் கட்டி வைத்து விட்டு சிந்தனையுடனும் குழப்பத்துடனும் தூங்கிப் போனாள்.
காலை ஆறு மணிக்கு விழித்துக் கொண்டாள். எழுந்ததும் இரவு ஏன் கெளதம் அப்படி நடந்துக் கொண்டான் என்ற சிந்தனையே அவளிடம் குடிக்கொண்டு இருந்தது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்.
குளித்து முடித்து விட்டு தலையில் துணியை சுற்றிக்கொண்டு வரும்போது எதிரில் மாமியார்.
வாமா, நல்லாத் தூங்கினியா? இந்தா காபி நீ குடிச்சிட்டு உன் புருஷனுக்கு கொண்டு பொய் கொடு.
ஏன் அத்த! இத நீங்க தான் செய்யனுமா? நான் வந்து செஞ்சி இருப்பேன் இல்ல.
நீ புது பொண்ணு! வந்த உடனே உன்ன வேலை வாங்க சொல்றியா? சரி இந்தமா காபி ஆறிடப் போகுது.
காபி ஐ வாங்கிக் கொண்டு கொடுத்து வைத்தவள் நான் என நினைத்துக் கொண்டாள். காபி ஐ அவள் குடிக்காமலே வைத்து விட்டு கெளதம் குடிப்பதற்காக ஆசையாக எடுத்துச் சென்றாள். அவன் படுத்து இருக்கும் அறையின் கதவைத் தட்டினாள். சத்தம் எதுவும் வராமல் போகவே உள்ளே சென்றாள்.
கெளதம் தூங்கிக் கொண்டு இருந்தான். அவள் காபி ஐ வைத்து விட்டு எழுப்ப முயன்றாள். அப்பொழுது அவனாகவே விழித்துக் கொண்டான்.
இவள் காபி ஐ எடுத்து நீட்டும் போது, நான் உன்ன காபி கேட்டேனா? யார கேட்டு உள்ள வந்த? கதவ தட்டிட்டு வரணும்னு தெரியாதா? என்று ஆத்திரம் தீரும் வரை திட்டி தீர்த்து விட்டு வெளியே சென்று விட்டான்.
முதல் முறையாக இடிந்து போனாள் வினிதா. ஆக என்னை இவனுக்கு பிடிக்கவில்லை என்பதை மட்டும் தெளிவாக தெரிந்து கொண்டாள். ஆனாலும் ஒரு தீர்மானமாக இருந்தாள். அவனாக பேசும் வரை தான் ஒன்றும் பேசக் கூடாது என்ற முடிவில் தீர்மானமாக இருந்தாள்.
ஆனாலும் அவள் நடந்த எதையும் வெளிக் காட்டிக் கொள்ள வில்லை. இது வரை நடந்த சம்பவங்களையும் இனி நடக்கப் போகும் சம்பவங்களையும் தன் பெற்றோருக்கோ மாமனார், மாமியாருக்கோ வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. தானே சமாளிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
சரியென்று கீழே பொய் மாமியாருக்கு கூட இருந்து வேலை செய்ய சென்று விட்டாள். மாமியார் செண்பகம் காலை உணவிற்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்து இருந்ததால் எல்லாம் தயாராக இருந்தது.
அத்த நான் வந்து செஞ்சி இருப்பேன் இல்ல! ஏன் எல்லா வேலையையும் நிங்களே செய்யறிங்க? நான் தான் வந்துட்டேன் இல்ல இனி எல்லா வேலையையும் நான் தான் செய்வேன்.
சரிமா செய்யலாம். வந்த உடனே உன்ன வேல வாங்க எனக்கு மனசு வரல. மேலும் பாக்குறவங்க மருமகள் வந்த உடனே எல்லா வேலையையும் செய்ய சொல்லிட்டேன் னு தப்பாப் பேசுவாங்க!
ஒன்னும் பேச மாட்டாங்க இனிமே நா.......
சரி! நீ போய் கெளதம் ஹ சாப்பிட கூட்டிட்டு வா என்று அவளை பேச விடாமல் அனுப்பி வைத்தாள்.
அவளுக்கு அவனை சாப்பிட கூப்பிட போகவே பயமாக இருந்தது. காபி கொடுக்கும் போதே கோபம் தலைக்கேற பேசியவன். இப்பொழுது கூப்பிட போனால் என்ன சொல்லுவான்? யோசித்துக் கொண்டே சென்றவள் வழியில் வந்த மாமனார் ஆறுமுகத்தை பார்க்கவில்லை.
என்னமா, வீடு எப்படி? புடிச்சி இருக்கா?
ம்ம்ம் .புடிச்சி இருக்கு மாமா.
எங்க கெளதம் அஹ சாப்பிட கூப்பிட போறியா?
ஆமாம் மாமா.
சரி போய் கூட்டிட்டு வா. எல்லோரும் ஒன்னா உட்கார்ந்து சாப்டலாம்.
மாமனார், மாமியார் எல்லோரும் நல்லவங்க தான். ஆனால் கெளதம்..........
யோசித்தவாறே கெளதம் இருக்கும் ரூம்கிட்ட வந்து விட்டாள். இந்த முறை உள்ளே போக வில்லை. வெளியில் இருந்தே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள்.
கண்ணாடி முன் நின்று கொண்டு தலை வாரிக் கொண்டு இருந்தான். கதவைத் தட்டினாள். திரும்பி பார்த்தான். அம்மா உங்கள சாப்பிட கூப்பிட்டாங்க என்று வெளியில் இருந்தபடியே சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
அவள் சொல்லி சென்ற பத்து நிமிடங்கள் கழித்து தான் வெளியில் வந்தான். வரும்போது ஆபீஸ்க்கு கிளம்பி வந்து இருந்தான்.
என்னடா கல்யாணம் ஆகி ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள ஆபீஸ்க்கு கிள்ளம்பிட்டியா? ரெண்டு வாரம் லீவ் தான போடச் சொன்னேன் என்று அம்மா கேட்டாள்.
ஆபீஸ்ல வேலை நிறைய இருக்குமா என்று ஒத்தை வரியில் மட்டும் பதில் கூறினான்.
உன்னை எல்லாம் திருத்த முடியாது. நீ சொன்னாலும் கேட்கமாட்ட. சரி மாலை ஆபீஸ் முடிந்து சீக்கரம் வீட்டுக்கு வா. நீயும் வினிதாவும் சினிமாவுக்கு போய்ட்டு வரலாம் சரியா.
இல்லமா. இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. வரமுடியாது என்று மழுப்பலாக பதில் கூறினான்.
ஏன்டா இப்படி இருக்குற நீ! புது மாப்பிளை தானே நீ? நினைப்பு இருக்கா உனக்கு?
அம்மா கேட்டது கூட காதில் வாங்காமல் அரைகுறையாக சாப்பிட்டு விட்டு சென்று விட்டான்.
சென்பகத்திற்கும் அவன் செய்கை வியப்பை அளித்தது. ஏறிட்டு வினிதாவை பார்த்தாள். அவள் ஒன்றும் அறியாதவளாக வாங்க அத்தை சாப்பிடலாம். வேலை டென்ஷன் அஹ இருக்கும் போலருக்கு என்று மழுப்பலாக பதில் கூறினாள்.
மாலை.
கெளதம் ஆறு மணிக்கு ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தான். அம்மாவிடம் விஷயத்தைக் கூறினான். அம்மா எனக்கு கோயம்புத்தூர்கு transfer ஆகி இருக்கு. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அங்க போய் ஆகணும். என் டிரஸ் எல்லாம் மடிச்சி வை மா.
ஏன்டா! நீ மட்டுமா போற?
ஆமாம் ஏன் கேட்கற?
என்னடா! உனக்கு கொஞ்சமாவுது அறிவு இருக்கா? கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது. கட்டின பொண்டாட்டிய இங்கவே விட்டுட்டு போறேன்னு சொல்ற? அங்க போய் எங்க தங்குவ? எங்க சாபிடுவ? பொண்டாட்டியோட போனா வீடு வாடகைக்கு எடுத்துக்கலாம் என்று பலவற்றைக் கூறி வினிதாவை அவன் கூட அனுப்பிவைத்தாள்.
கோயம்புத்தூர் சென்று இரண்டு வாரங்கள் ஓடிற்று. கெளதம் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட பேசுவது இல்லை. அவளின் முகத்தை ஏறிட்டும் பார்ப்பது இல்லை. அவளும் எதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை.
ஆனால் வீட்டுக்கு தேவையானதை அனைத்தையும் வாங்கி போட்டு விடுவான். ஆனால் சமைத்து வைத்தாள் மட்டும் சாப்பிட மாட்டான். அவன் புதுசு புதுசாக செய்யும் செய்கைகள் அவளுக்கு மேலும் வேதனையை தான் தந்தன.
ஒரு நாள் நேரடியாக கேட்டே விட்டாள். வீட்டுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி போடுறிங்க. ஆனா சமைச்சு வச்சா மட்டும் சாப்பிட மாட்டுறிங்க. என்ன பிடிக்கல. நான் செய்யுறது எதையும் பிடிக்கல உங்களுக்கு அப்படி தானே! என்று கேட்டு கதறி அழுதாள்.
அவள் எவ்வளவு கேட்டாலும் வாய் திறந்து பதில் பேசுவது இல்லை அவன். நான் சமைச்சு வச்சா மட்டும் சாப்பிட மாட்றான்.ஆனா இவன் வாங்கி போடுறத மட்டும் நான் ஏன் சாப்பிடனும் என்று நினைத்து இரண்டு நாட்கள் பட்டினியாக கிடந்தது பார்த்தாள்.
ஆனால் ஏன் பசியோடு இருக்கிறாய் என்று கேட்கவும் நாதி இல்லை. நாம் இவனிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்று விடலாம். ஆனால் அவள் அப்பா அவளை கரை சேர்க்க பட்ட பாட்டை மறக்க முடியாது அவளால். அதற்காகவே பொறுமையாக இருந்தாள் அவள்.
ஒரு நாள். காய்ச்சல், தலைவலி என்று பெரும் அவதிபட்டுக் கொண்டிருந்தான். எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ்க்கு கிளம்பி விடுபவன் மணி பத்தாகியும் படுத்து இருப்பதை பார்த்து விட்டு கிட்டே வந்து அவன் நெற்றியின் மீது கை வைத்து பார்த்தாள்.
உடல் நெருப்பாக கொதித்தது. உடனே பதறிப் போய் பக்கத்தில் இருந்த மெடிக்கல்கு சென்று காய்ச்சலுக்கு உண்டான மாத்திரையை வாங்கி கொடுத்து தேவையான பணியை செய்து தந்தாள்.
அவன் அப்பொழுதும் முகம் சுளித்தான். விக்க்ஸ் தடவி விட சென்ற போது கையை தட்டி விட்டான்.
இங்க பாருங்க. இத நான் உங்களுக்கு ஒரு பொண்டாட்டியா செய்யல. ஒரு வேலைகாரியாதான் செய்யறேன். அவள் சொன்னது அவனுக்கு சுருக்கென்று குத்தியதோ என்னவோ பேசாமல் இருந்து விட்டான்.
உடல் இரண்டு நாட்களுக்குள் தேறி பழையபடி ஆபீஸ் சென்று விட்டான்.
மாலை.
ஆறு மணிக்கு ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு பைக் இல் வந்து கொண்டு இருந்தான். வழியில் அவன் நண்பன் ஜீவாவை பார்த்தான். பள்ளி பருவத்திலிருந்தே இருவரும் நண்பர்கள்.
டேய் ஜீவா எப்படிடா இருக்குற? நல்லா இருக்கியா என்று கேட்டான்.
என்ன விடுடா. உன் கல்யாணத்துக்கு ஒரு அழைப்பிதழ் கூட அனுப்ப முடியில இல்ல உன்னால.
டேய் சாரி பா. நீ வேற ஊருக்கு மாறி போய்டனு சொன்னாங்க அட்ரஸ் தெரியல அதான் என்று ஏதோ உளறி வைத்தான். ஆமாம் நீ இந்த ஊர்லயா இருக்க?
ஆமாம், நீ எப்படி இங்க.
நானும் இந்த ஊருக்குத்தான் மாற்றல் ஆகி வந்து இருக்கேன்.
உன் மனைவி எப்படி இருக்காங்க என்று ஜீவா கேட்டதும் அதுக்கு பதில் கூறாமல் நின்று இருந்தான்.
என்னடா நான் கேட்கறேன் நீ பாட்டுக்கு எதையோ யோசனை பண்ற.
இதுவரை வாயையும் மனசையும் திறக்காத கெளதம் இப்பொழுது தான் திறந்து நண்பனிடம் கூறினான்.
தான் ஒரு பெண்ணைக் காதலித்து அவளால் ஏமாற்றப் பட்டதும், ஆதலால் பெண் இனமே பிடிக்காமல் போனதும், கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததும், இதுவரை முதல் இரவே நடக்காமல் அவளிடம் பேசாமல் இருப்பதையும் வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டதாக புலம்பினான்.
டேய் போடா முட்டாள். படிச்சவன் தாண்டா நீ? சட்டப்படி பார்த்தாள் உன் மனைவி தான் உனக்கு தண்டனை தரனும். ஒன்னும் அறியாத பொண்ணுடா அவ. அவளுக்கு போய் எப்படிடா நீ எவ்வளவு தண்டனைய தரலாம்.
........................
ஒன்ன ஒரு பொண்ணு ஏமாத்திட்டா என்பதற்காக நீ ஒரு பொண்ண ஏமாத்தப் பார்க்குறியே மனுஷனாடா நீ? ஒரு பொண்ணு அப்படி இருந்தா எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரின்னு நீயே கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு அவ என்னடா பண்ணுவா?
..............................
உன்னையே நம்பி வந்து இருக்கிறாள் என்பதை மறந்துவிட்டியா நீ? டேய் முதல்ல மனைவிய மதிக்க கத்துக்கோ. உன் மனைவிகிட்ட நீ இதுவரைக்கும் பேசாம மௌன விருதம் இருந்தியே. அவ கிட்ட பொறுமை இருந்ததால் தாண்டா இத எல்லாம் தாங்கி இருந்து இருக்காள்.
....................................
டேய் ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ. உடம்புக்கு நோய் வந்தால் மருந்து போட்டு குணப்படுத்திடலாம். ஆனா மனசுக்கு நோய் வந்தால் நீ எந்த மருந்து கொடுப்ப? அன்பு என்ற ஒன்னு மட்டும் தாண்டா குணப்படுத்தும்.
...............................
டேய் ஒரு பெண்ணுக்கு நகையோ பணமோ சந்தோழத்த தராதுடா. நீ படிச்சவன். புரிஞ்சிக்கோ. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டுடா. பாவம்டா உன் மனைவி. போடா போ. இனிமேலாவது போய் உன் மனைவி கூட சந்தோஷமா இரு. நண்பன் சொன்ன அறிவுரையால் திருந்திய மனிதனாய் வீடு திரும்பினான்.
அதே நேரம் வினிதா கை நிறைய தூக்க மாத்திரைகளை வைத்துக்கொண்டு நின்று இருந்தாள்.
சாமி படம் முன் நின்றுக் கொண்டு கதறி அழுதாள். இறைவா! என்னை ஏன் படைத்தாய். நான் ஒரு தப்புமே செய்யாமல் எனக்கு ஏன் இந்த சித்தரவதை. காரணமே இல்லாமல் கெளதம் ஏன் என்னிடம் பேசமாட்டேன் என்கிறார். நான் இனி எத்தனை நாள் தாங்குவேன் இந்த மௌனப் போராட்டத்தை.
இனி தாங்குற சக்தி எனக்கு கிடையாது. கொஞ்ச கொஞ்சமா சாகுரத விட ஒரே வழியா செத்துடறேன் என்று கூறி தூக்க மாத்திரைகளை விழுங்கப் போனாள்.
அப்பொழுது....
ஒரு கை அவளின் கையை தட்டி விட்டது. திரும்பி பார்த்தால்.
அங்கு கெளதம் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தான்.
தண்டனை கொடுப்பதாக இருந்தால் எனக்கு கொடு. நான் ஒரு பாவி. உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன். உன் கையாலேயே என்னைக் கொன்று விடு என்று கூறி கண் கலங்கினான்.
வினி என்னை மன்னிசிடுமா! நான் ஒரு பெண்ணை காதலிச்சு ஏமாந்ததால பெண் வர்க்கமே என்னகு பிடிக்காம போய்டுச்சி. அத மனசுல வச்சியே நான் உனக்கு துரோகம் செய்ய நினைச்சேன். என்ன மன்னிச்சிடுமா என்று கூறி தான் ஒரு ஆண் என்றும் பாராமல் அழுதான்.
தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.
வினி இதுவரைக்கும் நடந்தத ஒரு கெட்ட கனவா நினச்சி மறந்துடு. இனிமே ஒரு புது வாழ்க்கைய ஆரம்பிப்போம் என்று கூறி அவளை இறுக தழுவிக் கொண்டான்.
அவளின் வாழ்க்கைக்கு ஒரு வழி கிடைத்து விட்ட சந்தோஷத்தில் அவன் மார்பில் முகம் புதைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
***முற்றும்***

No comments:

Post a Comment