Sunday, December 13, 2009

"இப்படிக்கு காதல்"


என் தேசத்தில்
என்னை நேசித்த ஒவ்வொரு
ஜோடி புறாக்களும்
தனித்தனியாக பிரிந்துசென்று
தனக்கென ஒரு
வாழ்க்கையை
அமைத்துக்கொள்கின்றன.
இங்கு
நான் மட்டுமே
ஒவ்வொரு முறையும்
அனாதையாக்கி விடப்படுகிறேன்....
இப்படிக்கு
காதல்.......

Friday, November 20, 2009

"தோழி"


எனது
கண்ணீரைத் துடைக்கும்
முதல்
"இரவுத் தோழி"
தலையணை........

Wednesday, November 18, 2009

"தலையணை"


எனது தலையணைக்கு மட்டும்
பேசும் சக்தி இருந்திருந்தால்
இந்நேரம் கூறியிருக்கும்...
என்னால்
உப்பு நீரை அதிகம்
குடிக்க முடியவில்லை
அழுவதை இன்றோடு
நிறுத்திக் கொள் என்று..........

Friday, November 6, 2009

"தோழமை"


கடல் தன்னுடைய உக்கிர தாண்டவத்தை ஆடிவிட்டு அமைதியாக இருந்தது. ஆனால் அது சுனாமி என்னும் பெயரில் வந்து போனதால் யாருடைய மனதிலும் அமைதி இல்லாமல் செய்து விட்டது. சுனாமி வந்த வேகத்தில் ஏற்கனவே இருந்த வீடுகளை எல்லாம் அதன் சுவடே தெரியாமல் அடித்து சென்று இருந்தது.

கடலின் கொந்தளிப்பு அடங்கி விட்டது. ஆனால் அது ஏற்படுத்திய சேதத்தால், மக்களின் மனதில் கொந்தளிப்பு ஏற்பட்டு அலை கடலோடு போட்டிபோட்டுக் கொண்டு இருந்தது. சரவணன் கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்க நேரம் இல்லாமல், பார்ப்பவர் அனைவரிடமும் ஏதோ கேட்டுக் கொண்டு இருந்தான். அவர்கள் அனைவரும் எந்த நேரத்துல என்னப்பா கேட்குற. எல்லோரும் உன்னை மாதிரிதான வயிறு எரிஞ்சி பொய் நிக்கிறோம். உனக்கு எப்படிப்பா கேட்க மனசு வந்தது என்று ஏக வசனம் பேசிக் கொண்டு சென்றனர். சரவணன் சோர்ந்து போய் அமர்ந்தான். சுனாமி வந்து பாரபட்சம் இன்றி எல்லாவற்றையும் அடித்து சென்று விட்டதால், அனைவரும் ஒரு வேலை சாப்பாட்டுக்கே அடுத்தவரை எதிர் பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நேரத்தில் சரவணன் தன மனைவியை பிரசவத்திற்க்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தான். தனியார் மருத்துவமனையில் சேர்த்து பார்ப்பதற்கு வசதி இல்லைதான். ஆனால் அடித்த சுனாமியில் அரசு மருத்துவமனை தற்பொழுது சிகிச்சை அளிக்கும் அளவுக்கு தயாராக இல்லை. மருத்துவமனையை சரிசெய்ய இரண்டு மாத காலம் ஆகும் என்பதாலும், இருந்த டாக்டர் அனைவரும் சுனாமி பாதித்த பகுதிக்கு சிகிச்சை அளிக்க சென்றதாலும், மருத்துவமனையில் தக்க பணியாளர்களோ உதவியோ இல்லாமல் இருந்தது.

சுனாமி பாதித்த கொடுமை ஒருபுறம் என்றால், மனைவிக்கு ஆபரேஷன் செய்தே குழந்தையை எடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறியதால், சரவணன் ஸ்தம்பித்து போனான். இதிலும் ஒரு கொடுமை என்னவென்றால், கட்டிய துணியை தவிர அவர்களிடம் எந்த பொருளும் இல்லை. மற்றவர்களின் குடிசையோடு அவனின் குடிசையும் இருந்த சுவடே தெரியாமல் அடித்து சென்று விட்டு இருந்தது. மனைவியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடிக் கூட சுனாமியில் அடித்து சென்றதுதான் கொடுமையிலும் பெருங்கொடுமையாக இருந்தது.

இப்படி மனைவியின் உயிரையும், என் குழந்தையையும் காப்பாற்ற வழி தெரியாமல் அனுஅனுவாக துடித்துக் கொண்டிருப்பதைவிட , நான் அந்த சுனாமியிலேயே அடித்து சென்று இருக்கலாம். சரவணன் ஓவென்று வாய்விட்டே அழுது விட்டான். சரவணன் அழுவதைப் பார்த்து பத்து அடி தூரத்தில் நின்று இருந்த செந்தில்,வேகமாக ஓடிவந்து என்னவென்று விஷயத்தைக் கேட்டான். சரவணன் அழுது கொண்டே விஷயத்தை கூறினான். தன் மனைவிக்கு பிரசவ நேரம் வந்து விட்டதாகவும், கையில் ஒத்த ரூபாய்க் கூட இல்லை என்றும், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், கண்ணீரை அடக்க முடியாமல் அழுது கொண்டே கூறினான்.

சரவணன் கூறியதைக் கேட்டு செந்தில் தான் மிகவும் வருத்தப் பட்டான். அழாதேடா. எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப் படாதே என்று ஆறுதல் கூறினான். டேய் செந்தில். உன்னுடைய நிலைமையும் எனக்குத் தெரியும்டா. இருந்த ஒரு பையனையும் சுனாமிக்கு பறிகொடுத்துட்டு நிக்கற. இந்த நேரத்துல உன்கிட்ட இதை கேட்கக்கூடாது தான். ஒரு ஐயாயிரம் பணம் இருந்தா கொடுடா. நான் மறுபடி கொடுத்து விடுறேன்.

செந்தில் ஆடிப்போனான். டேய் சரவணா! நீ எப்பவும் அடுத்தவங்கக் கிட்ட கையை நீட்டி எதையும் கேட்க மாட்டனு எனக்கு தெரியும். ஆனால் நீ முதன் முதலாய் என்கிட்டே கேட்கிறாய். நீ கேட்டதுலக் கூட வருத்தம் இல்லடா. ஆனால் இந்த நேரத்தில் உனக்கு உதவி பண்ண முடியாம இருக்கேன்னு தான்டா ரொம்ப வருத்தப் படுகிறேன் என்றுக் கூறி கண் கலங்கினான்.

டேய் செந்தில்! நீ ஏன்டா கலங்குற? உன்கிட்ட என்னைப் போலவே எதுவும் இல்லன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் செந்திலக் கேட்காம விட்டுடோமே, கேட்டு இருந்தா அவன் உதவி இருப்பான்னு நான் பின்னாடி வருத்தப் படாம இருக்கதான்டா கேட்டேன். என் நண்பனோட மனசு எனக்கு தெரியும் டா. நீ வருத்தப் படாத சரியா?

நீயும் கவலைப் படாத. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா தான் நடக்கும்.

எங்கடா நடக்குது. என் மனைவியோட பிரசவத்துக்கு குருவி சேக்கற மாதிரி சேர்த்து வச்சேன். இப்போ ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாம நிக்கறேன். இந்த பாழாப் போன சுனாமி, என் மனைவி கழுத்துல இருந்த தாலியக் கூட விட்டு வைக்கலடா. அது இருந்தா, அத வித்தாவது என் மனைவியோட பிரசவத்த பார்த்து இருப்பேன். எங்கடா நடக்குது நல்லது? இந்த சுனாமியிலேயே ஏன்டா சகலன்னு தோனுதுடா. துக்கத்தில் தொண்டை அடைத்தது சரவணனுக்கு.

செந்திலுக்கு திடிரென ஒரு யோசனைத் தோன்றியது. சரவணா! நீ மருத்துவ மனைக்குப் போ . உனக்கு நான் பணத்தோட வரேன். எப்படிடா கிடைக்கும் உனக்கு. அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நீ போ. நான் பணத்தோட வரேன். சரவணன் மருத்துவமனைக்கு சென்றான். செந்தில் வீடு சென்றான்.

சுதா இங்க வாயேன் என்று தன் மனைவியை அழைத்தான் செந்தில். சுதா அருகில் வந்தாள். செந்தில் தன் நண்பனின் நிலையைக் கூறினான். அடுத்த வேலை சாப்பாட்டுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த சுதா, ஒரே ஒரு கணம் தான் யோசித்தாள். உடனே தன் கழுத்தில் ஒரு பௌன் அளவுக்கு தொங்கிய தாலிக்கொடியை கழட்டி தன் கணவனிடம் கொடுத்தாள். உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்லைங்க. நம்மைவிட எவ்வளவோ வசதியா இருந்தவங்க எல்லாம், இன்னைக்கு அடுத்த வேலை சோற்றுக்கு கையேந்துற நிலைக்கு வந்துட்டாங்க. எனக்கு இது இருந்து என்னத்தக் கொடுக்கப் போகுது. எனக்கு இந்த மஞ்சக் கயிறு போதும். மிகப் பெரிய சொத்துன்னு நினச்சி வளர்த்த நம்ம பையனே போய்விட்டான். அவங்க பையைனாவது நல்லபடியா பொறந்து வரட்டும். நீங்க போய் இத வித்து , ஆகுற வேலையப் பாருங்க.

செந்தில் பிரமித்துப் போனான். உண்மையைக் கூற வேண்டுமானால் வள்ளுவனின் மனைவி வாசுகி இருந்திருந்தால் கூட இப்படி ஒரு முடிவை எடுத்ததிருப்பாளா என்பது சந்தேகம் தான். செந்தில் பெருமிதத்தோடு மனைவியைக் கட்டி தழுவி விட்டு, தன் நண்பனிடம் சென்றான். எதைக் கேட்க மனைவியிடம் தயங்கினானோ , அதையே தன் மனைவி ஒரு பொருட்டாக மதிக்காமல் செய்தது தான் அவனை பெருமைக் கொள்ள செய்தது. நண்பனிடம் சென்று பணத்தை நீட்டினான். சரவணன் பணம் எப்படி வந்தது என்றுக் கேட்டான். செந்தில் சொல்லத் தயங்கினான். அது எல்லாம் உனக்கு ஏன்? நீ உன் மனைவிய நல்லபடியா கவனிச்சிக்கோ. ஆனால் சரவணன் விடாமல் வற்புறுத்தினான். வேறு வழி இல்லாமல் செந்தில் நடந்ததைக் கூறினான்.

சுனாமி ஏற்படுத்திய தாக்கத்தை விட நண்பன் சொன்ன கதையைக் கேட்டு ஆடிப் போனான் சரவணன். டேய் தா... தாலி... தாலிய வித்து.... என்னடா இது. எனக்கு பணம் தேவைதான். அதுக்காக தாலிய வித்து எல்லாம் வேணாம் டா. பணத்தை வாங்க மறுத்தான் சரவணன். சரவணா! தன் தாலிய விற்று, அந்த பணத்தால தான் என் மகனோட உயிரைக் காப்பாற்ற முடியும் அப்படிங்கற ஒரு நிலை வந்தால், என் மனைவி இத தான்டா செஞ்சி இருப்பா. என் செத்துப் போன மகனே உன் வாரிசா வரப் போறான்னு நினைச்சுக்கிறேன். தயவு செஞ்சு இந்த பணத்தை வாங்கிக்கோ. என்கிட்டே இத விட்டா வேற பணம் இல்லைடா உனக்கு உதவி பண்ண என்றுக் கூறி கண் கலங்கினான். சந்தோஷத்தையும் துக்கத்தையும் அடக்கி பழக்கம் இல்லாத சரவணன், நண்பனை கட்டித் தழுவி நன்றிக் கூறினான்.

சுனாமி தனக்கும் மக்களுக்கும் பண்ண கொடுமையை அறிந்தும், அதற்கு நன்றி கூறினான். ஏன் எனில் ஒரு நல்லா நண்பனை அடையாளம் காட்டியதற்காக..........

**********முற்றும்**********