காலை மணி ஏழு.
சூர்யா கட்டிலில் புரண்டுப் படுத்தான். இருபத்தியேழு வயது மதிக்கத்தக்க, திரண்ட தோள்களைக் கொண்ட அழகான வாலிபன். தாய் லக்ஷ்மி அவனை வந்து எழுப்பினாள்.
டேய் சூர்யா! எழுந்திருடா! இன்னைக்குப் போய் இவ்வளவு நேரம் தூங்குறியே! இன்னைக்கு என்னனு தெரியுமா? எழுந்திருடா....
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன் நீ போமா.
டேய்! இன்னைக்கு உனுக்கு பெண் பார்க்கப் போறோம் எழுந்திரு டா. அதுகூட நினைவு இல்லாம தூங்குற! பிள்ளையாடா நீ?
அம்மா சொன்னதும் கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து அமர்ந்தான்.
அம்மா! எனக்கு இந்த விஷயத்தை நேத்தே நியாபகப் படுத்தி இருந்தா நாலு மணிக்கெல்லாம் எழுந்திருப்பேன் இல்ல!
ஏன்? இன்னும் ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்துக்க வேண்டியது தான? போடா போய் குளிச்சிட்டு வா. பத்து மணிக்கெல்லாம் பெண் வீட்டுக்குப் போகணும்.
அம்மா சொல்லி வாய் மூட வில்லை. பாத்ரூமுக்குள் சென்றுக் குளித்துக் கொண்டிருந்தான். குளித்து முடித்து விட்டு வெளியே வரும்போது தம்பி பாலு நின்றுக் கொண்டிருந்தான்.
அம்மா! இன்னைக்கு மழைதான் வரப்போகுது பாரேன் என்றான்.
ஏன் டா? என்று சூர்யா கேட்டான்.
இல்ல! நீ பத்ரூம்குள்ளப் போனா அரை மணி நேரம் கழிச்சி தான் வெளிய வருவ.இன்னைக்கு ஐந்து நிமிழத்துக்குள்ள வந்துட்ட! எல்லாம் பெண் பார்க்கப் போற குஷியா என்றான்.
போடா அதிகப் பிரசங்கி என்று அவனை அடிக்க ஓடினான்.
டேய்! விளையாண்டது போதும் வாங்கடா. எல்லோரும் ஒண்ணா உட்க்கார்ந்து சாப்பிடலாம் என்று தந்தை சுந்தரம் தன் இரு பிள்ளைகளையும் அழைத்தார்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். பாலு வாயை திறந்தான்.
அப்பா சென்ட் பாட்டில் இன்னைக்கு பாதி காலி ஆகிடும் பாருங்களேன்.
அவன்கிட்ட போகலைனா உனக்கு தூக்கம் வராதே! என்று தாய் கூறினாள்.
உண்டு முடித்து விட்டு எல்லோரும் பெண் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
பாலு கண்ணாடி முன் நின்றுக் கொண்டு தலையை வலைத்து வலைத்து சீவிக் கொண்டு இருந்தான்.
டேய்! இன்னைக்கு எனக்கு தான் பெண் பார்க்கப் போறாங்க. உனக்கு இல்ல! போதும் கண்ணாடிய விட்டு விலகி வாடா என்றான் சூர்யா.
ஹ்ம்ம். பொண்ணு பக்கத்துல யாராவது இருந்தா அப்படியே செட் பண்ணிக்கலாம்னு பாக்கறேன் என்று கிண்டலாக கூறினான்.
ஹ்ம்ம். விட்டா நீ பொண்ணையே செட்அப் பண்ணாலும் பண்ணிடுவ. உன்கிட்ட கொஞ்சம் பார்த்து தான் இருக்கணும்.
ஹ்ம்ம். இந்த பயம் இருக்கட்டும் என்றான்.
அடி செருப்பால என்று அவனை அடிக்க ஓடினான். பாலு கீழே வந்து விட்டான். சூர்யா கிளம்பிக் கொண்டு இருந்தான். அனைவரும் கிளம்பி தயாராக நின்றுக் கொண்டிருந்தார்கள்.
டேய் சூர்யா! கார் ரெடியா இருக்கு. சீக்கரம் வாடா என்று அம்மா அழைத்தாள். இதோ வந்துட்டேன்மா என்று எதையோ மறந்தவனாக மீண்டும் உள்ளே ஓடினான்.
அம்மா இவன் தாலி கட்டுறதுக்கு கூட லேட்டா தான் வருவான் பாருங்களேன் என்றான். அவன் சொன்ன விதம் அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்து விட்டது.
லாவண்யாவின் இல்லம்
லாவண்யா! இன்னைக்கு உன்னை பெண் பார்க்க வராங்க இல்ல. ப்ளூ கலர் புடவை எடுத்துக் கட்டிக்கோ. அது உனக்கு ரொம்ப அழகா இருக்கும் என்று தாய் கோமதி கூறினாள்.
பெண்ணுக்கு ஜோடிப்பு எல்லாம் முடித்து விட்டு என் கண்ணே பட்டுடும் போல என்று திஷ்டி கழித்து விட்டு வெளியே வந்தாள்.
வாசலில் கார் சத்தம் கேட்டது. என்னங்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துட்டாங்க போல இருக்கு என்று கணவர் சிவராமனிடம் கூறினாள். இருவரும் சென்று மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க வாசலில் நின்றுக் கொண்டு இருந்தனர்.
காரை விட்டு இறங்கியதும் பாலு சொன்னான். சூர்யா! வீடே இவவளவு அழகா இருக்கே. பொண்ணு எவ்வளவு அழகா இருக்கும்.
டேய்! வாய மூடுடா! இது என் ஆளு. வாய திறந்த உதைப்பேன் என்று செல்லமாக கடிந்துக் கொண்டான்.
வீட்டின் உள்ளே சென்று அமர்ந்ததும் சூர்யா கண்களை நாலா பக்கமும் சுழல விட்டான். ஒண்ணும் அலையாத. பொண்ண கண்டிப்பா உன் கண்ணுல காட்டுவாங்க என்றான் பாலு.
அவன் சொல்லி வாய் மூட வில்லை. லாவண்யா காபியுடன் வந்தாள். எல்லோருக்கும் கொடுத்து விட்டு கடைசியாக சூர்யாவிடம் வந்தாள். அவன் காபியை எடுக்க கையை நீட்டிக் கொண்டு எடுக்காமலே அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
பாலுதான் அவனை இடித்தான். டேய் ரொம்ப வழியாத. முதல்ல காபிய எடு. அப்போதுதான் அவனுக்கு அவனை அறியாமலே அவளை ரசித்துக் கொண்டு இருப்பது புரிந்தது. அசடு வழிந்தவனாக காபியை எடுத்து பருகினான்.
பெண்ணை அனைவருக்கும் பிடித்து இருந்ததால், இருவர் பக்கமும் முக்கியமான சொந்தங்கள் இல்லாததால், இரு வீட்டாரும் கலந்து பேசி இன்றே நிச்சய தேதியை குறிப்பது என முடிவு எடுத்தனர். அருகில் இருந்த ஐயர் வரவழைக்கப்பட்டார்.
சூர்யா தாங்கமுடியாதவனாக பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்! பேசலாமா? என்று கேட்டான்.
ஓ! போய் தாராளமாக பேசுங்க என்று சிவராமன் கூறினார்.
லாவண்யா தலையைக் குனிந்துக் கொண்டு சுவற்றின் ஓரமாக நின்றுக் கொண்டு இருந்தாள்.
சூர்யா அவளிடம் வந்து உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. என்ன உங்களுக்கு பிடிச்சி இருக்கா? என்று கேட்டதோடு அல்லாமல், நான் பார்க்குற முதல் பெண் நீங்கதான். பார்க்குற முதல் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கணும் அப்படி என்பதுதான் என் ஆசை. என் ஆசை படி உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சி போய்டுச்சு. உங்க விருப்பம் என்னனு தெரிஞ்சிகிட்டா நான் கொடுக்க வந்தத கொடுத்துடுவேன் என்றான்.
லாவண்யா குனிந்த தலை நிமிராமலே எனக்கும் உங்கள ரொம்ப பிடிச்சி இருக்கு என்று சொன்னது தான் தாமதம்.
அவளின் விரலில் தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தை போட்டுவிட்டு அவளின் கைகளில் முத்தமிட்டான்.
என்ன நடந்தது என்று அறியவே லாவண்யாவுக்கு சில நொடிகள் பிடித்தது. லாவண்யா அவன் போட்ட மோதிரத்தையே வெட்க்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெளியே பாலுவின் குரல். டேய் சூர்யா! அண்ணி உனக்குன்னு முடிவு பண்ணியாச்சு. மீதிய நாளைக்கு வச்சுக்கலாம் வெளியே வாடா. இங்கேயே டேரா போட்டுட போற என்றுக் கூறி கதவை ஒரு முறைக்கு இரு முறைத் தட்டினான்.
சூர்யா கண்களால் வார்த்தைகளை பரிமாறி விட்டு வெளியே வந்தான். என்ன சிவ பூஜைல கரடி மாதிரி வந்துட்டேனா? என்று பாலு கேட்டான்.
தெரிஞ்சா சரி என்றான் சூர்யா.
உன்ன பத்தி தெரிஞ்சி தான் கல்யாணத்த ஒரு மாசத்துக்குள்ள வச்சி இருக்காங்க. அப்பா இப்பதான் என் ரூட் clear ஆச்சு. நீ மட்டும் இந்த பொண்ணு பிடிக்கலைனு சொல்லி இருந்தினா பக்கத்து தெருவுல இன்னொரு பொண்ணு ரொம்ப அழகா இருக்காம். அவள கூட்டிட்டு ஓடிப் போய் உனக்கு முன்னாடியே அவள நான் கல்யாணம் பண்ணி இருப்பேன் என்றான் பாலு.
நீ செஞ்சாலும் செய்வ வாடா என்று அவன் தலையில் தட்டி அவனை அழைத்து சென்றான் சூர்யா.
கிழே அனைவரும் தயாராக நின்றுக் கொண்டு இருந்தனர். சூர்யா பாலு வந்ததும் அனைவரிடமும் கூறி சூர்யா குடும்பத்தினர் விடைப் பெற்றனர்.
காரில் வரும்போது பாலு சூர்யாவிடம் கேட்டான். சூர்யா பொண்ணு கிட்ட தனியா பேசுனியே அங்க என்னடா நடந்தது.
சூர்யா திரும்பி செல்லமாக முறைத்தான். இல்ல சொன்னினா நானும் எனக்கு பொண்ணு பார்க்கும் பொது ட்ரை பண்ணி பார்ப்பேன் இல்ல அதுக்காக கேட்டேன் என்றான் பாலு.
டேய்! விட்டா நீ எனக்கு டியூஷன் எடுப்ப. என்ன கேட்குறியா நீ? என்றதும் பாலு வழிஞ்சலாக சிரித்து விட்டு வாயை மூடிகொண்டான்.
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பெண் வீட்டாரைப் பற்றியப் பேச்சு அரை மணி நேரம் ஓடியது.
இன்று சண்டே ஆனதால் நண்பர்களை பார்க்க சென்று விட்டான் சூர்யா. அங்கு கோபி, விக்ரம், சுரேஷ், வசந்த் நின்றுக் கொண்டிருந்தார்கள். சூர்யா பைக்கை விட்டு இறங்கினான்.
நண்பர்கள் கோரஸ்ஹாக கேட்டார்கள். டேய்! பெண் பார்க்க போனியே. பொண்ணு எப்படி இருக்கா? உனக்கு பிடிச்சி இருக்கா?
பொண்ணு சூப்பர் டா என்றான் சூர்யா. எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க. பத்து நாளைக்குள்ள நிச்சயதார்த்தம். ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம்.
டேய்! நீ போற வேகத்தை பார்த்தால் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க மாட்ட போல என்றான் விக்ரம்.
ச்சே ச்சே! அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் டா என்றான் சூர்யா.
டேய்! அப்படியே யாராவது இருந்தா எனக்கு ஒன்னு பார்க்க வேண்டியது தான? என்றான் சுரேஷ்.
ஹ்ம்ம். நாற்பது வயசுல வீட்டு வேலைக்காரி இருக்கா. அவளுக்குக் கூட இன்னும் கல்யாணம் ஆகல. அவ ஓகே வா என்றான் சூர்யா.
போடா. அவள நீயே வச்சுக்கோ என்றான் சுரேஷ். அனைவரும் சிரித்து விட்டனர். நண்பர்களுடன் பேசி முடித்து விட்டு மாலை வீடு வந்து சேர்ந்தான்.
மறுநாள் ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸ் சென்று விட்டன் சூர்யா. ஆபீஸில் வேலை செய்யவே ஓட வில்லை. எல்லாம் லாவண்யாவின் நியாபகம் தான். அவளுக்கு போன் செய்யலாமா? வேண்டாமா? என்று யோசித்தான். சிறிதும் தாமதிக்காமல் போன் செய்தான். லாவண்யாதான் போனை எடுத்தாள்.
ஹலோ! நான் லாவண்யா பேசுறேன் யார் பேசுறது?
ஹலோ லாவண்யா! நான்தான் சூர்யா பேசுறேன். எப்படி இருக்கா? நல்ல இருக்கியா?
என்ன! ஆபீஸ்ல வேலை செய்யவே ஓடல போல!
எப்படி.....! எப்படி.... கண்டு பிடிச்ச? இங்க மட்டும் என்னவாம் என்றாள். அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அவளிடம் பேசிய பிறகுதான் வேலைகளை செய்ய முடிந்தது அவனால்.
தினமும் இருவரும் டெலிபோன் உரையாடல் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் போது நிச்சய நாள் நெருங்கியது.
நிச்சயம் இனிதே நடைப் பெற்று முடிந்தது.
திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருந்தன.
இன்று சண்டே. சூர்யா நண்பர்களை சந்தித்து விட்டு மனதில் அதிக சந்தோழத்தோடு பைக்கில் வந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது எதிரே லாரி ஒன்று தாறுமாறாக வந்துக் கொண்டிருந்ததை அவன் கண்டான். ஒரே ஒரு கணம் தான். அவன் நிதானிப்பதற்குள் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டான்.
தலையில் இருந்து நிறைய ரத்தம் வடிந்து இருந்தது. அங்கிருந்தவர்களால் மருத்துவ மனைக்கு தூக்கிச் செல்லப்பட்டான்.
டாக்டர் கதிரேசன் முன் சுந்தரம், லக்ஷ்மி, பாலு மூவரும் அமர்ந்து இருந்தார்கள்.
லக்ஷ்மி பதைபதைப்புடன் கேட்டாள். டாக்டர்! என் பிள்ளைக்கு எப்ப.... எப்படி இருக்கு? ப்ளீஸ் டாக்டர் சொல்லுங்க. நீங்க மொவ்னமா இருக்குறத பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவனுக்கு இன்னும் பதினைந்து நாள்ல கல்யாணம். ப்ளீஸ் டாக்டர் சொல்லுங்க என்று கேட்டு அழுதாள்.
உங்க மனச கொஞ்சம் தேத்திகோங்க. உங்க பையனுக்கு தலைல அதிகமா அடிப் பட்டதால கண் தெரியறதுக்கு வாய்ப்பு இல்லாம போய்டுச்சு என்றார்.
டாக்டர் சொன்ன பதிலைக் கேட்டு மூவரும் இடிந்து போனார்கள். சுந்தரம் கேட்டார். ஏன் டாக்டர் என் பையனுக்கு கண்ணு தெரியறதுக்கு வாய்ப்பே இல்லையா? என்றார்.
இருக்கு. இவர் ப்ளூட் குரூப் உள்ள டோனர் கண்தான் பண்ண ரெடியா இருந்தாங்க அப்படினா வாய்ப்பு நிறைய இருக்கு. பட் கண் ரொம்ப சீக்கரம் கிடைக்காது. சில வருழங்கள் ஆகலாம். பணம் நிறைய செலவு ஆகும்.
பணம் எவ்வளவு செலவு ஆனாலும் பரவா இல்ல டாக்டர். என் உயிரைக் கொடுத்தாவது என் அண்ணனுக்காக நான் பணத்தை ரெடி பண்றேன் டாக்டர். அவனுக்கு முதல்ல கண் தெரியனும் என்றான் பாலு. பாலுவுக்கு அண்ணன் மீது உள்ள பாசத்தை உணர்ந்து பெற்றோர் மட்டும்மல்ல டாக்டரும் நெகிழ்ந்து போனார்.
இந்த செய்தி லாவண்யாவின் வீட்டுக்கு பறந்தது. செய்தியைக் கேட்டு மூவரும் இடிந்து போன்னார்கள். லாவண்யா மிகவும் உள்ளம் உடைந்து போனாள். லாவண்யாவின் பெற்றோர் பதறினர். கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே.
தன் ஒரே பெண்ணின் வாழ்க்கை வீணாக போவதை விரும்பாத லாவண்யாவின் தந்தை, என் நண்பன் லாவண்யாவிற்கு வரன் முடிந்த பிறகு அவன் பையனுக்கு பெண் கேட்டான்.
நான் அவனை பார்த்து பேசிட்டு வரேன் என்று சூர்யாவைக் கூட பார்க்கத் தோணாமல் கிளம்பினார்.
இதைக் கேட்டு லாவண்யாவினால் பொருக்க முடியவில்லை. அப்பா மனுஷனா நீங்க? எப்படிப்பா முடியுது உங்களால மட்டும். அவங்க மகன் இப்படி ஆகிட்டான்னு கவலைப் பட்டுட்டு இருக்காக. 'வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுகிற மாதிரி' அவங்கள போய் கூட பார்க்க தோணாம மாப்பிளைய மாத்த கிளம்பிட்டிங்க.
நீ சும்மா இரு. உனக்கு ஒன்னும் தெரியாது. எந்த பொண்ண பெத்தவனா இருந்தாலும் இப்படிதான் செய்வான். எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம். ஒரு கண் இல்லாதவனுக்கு கட்டிக் கொடுக்க நான் தயாரா இல்ல. அப்பா......................! இன்னொரு தடவ அவர கண் இல்லாதவன்னு சொல்லாதிங்க. இனிமே அவருக்கு கண்னுக்கு கண்ணா நான் இருப்பேன். நீங்க மாபிளைய மாத்த பார்க்கலாம். பட் என் மனச மாத்த முடியாது. நான் மனசளவுல அவர் கூட வாழ்ந்துட்டு இருக்கேன். கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது சூர்யா கூட தான் நடக்கும். அவர் எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்ல.
தன் மகள் லாவண்யாவா இப்படி பேசுவது என்று நம்ப முடியாமல் பார்த்தார் அவளின் தந்தை.
என்னமா நீ! உன்ன தெரிஞ்சும் படுகுழியில தள்ள சொல்றியா? அவனுக்கு தான் கண் தெரியாம போய்டுச்சே. அப்புறம் எப்படிமா அவனை கட்டிக்க போறேன்னு சொல்ற.
அப்பா! தன்னை ஒருவன் பெண் பார்த்துட்டு போய் அவர் இறந்த பிறகு அவரையே தன் கணவனா நினச்சி வாழ்ந்த திலகவதி கதையெல்லாம் நீங்க படிச்சது இல்லையாப்பா? அது காதல்னா இதுவும் காதல் தாம்ப்பா. காதலுக்கு உள்ளத்த மட்டும்தான் அப்பா பார்க்க தெரியும். நீங்க சொல்ற மாதிரி ஊனத்தை பார்க்க தெரியாது. நீ என்ன சொல்லு என்னால ஏத்துக்க முடியாதுமா. என்னால உன்ன கொண்டு போய் படுகுழியில தள்ள முடியாது. நான் உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கத்தான் போறேன் என்றார் பிடிவாதமாக.
அப்பா.....! நீங்க மாப்பிள்ளைய மாத்தி கல்யாணம் பண்ணனும்னு நினச்சா அந்த தேதியில எனக்கு கல்யாண ஊர்வலம் நடக்காது. பின ஊர்வலம் தான் நடக்கும். எதுன்னு நீங்களே முடிவுப் பண்ணிக்கோங்க. என்றுக் கூறி சூர்யாவைப் பார்க்க கிளம்பி விட்டாள்.
லாவண்யா சொன்னதை செய்பவள். ஒரே பெண் வேறு.சரி அவள் இஷ்டப் படியே செய்யலாம். அவள் தலைவிதி எப்படியோ அப்படியே நடக்கட்டும் என்று அவரும் தன் மனைவியுடன் கிளம்பினார் சூர்யாவை பார்க்க. மருத்துவமனையில்......
சூர்யா பாலுவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
டேய் பாலு! இனிமே லாவன்யாவ நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. ஒரு கல்யாணம் வேழ்ட்டா நின்னு போகும். எனக்கு நிச்சயம் பண்ண தேதியில அவள நீ கல்யாணம் பன்னிகோடா. அவ ரொம்ப நல்ல பொண்ணுடா என்றான். சாரி சூர்யா! என்னைக்கு அவங்க உன்னக்குனு முடிவாகிடுச்சோ, அன்னையிலேர்ந்து அவங்கள நான் என் சகோதரியாதான் பார்கிறேன். அதனால அவங்கள என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுடா. வேணும்னா அவங்களுக்கு சகோதரன் ஸ்தானத்துல இருந்து நானே ஒரு நல்ல பையனா பார்க்குறேன் என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.
பாலுவைப் நன்கு தெரிந்து வைத்து இருந்ததால் அதற்க்கு மேல் அவனிடம் எதுவும் கேட்க வில்லை. ராமனுக்கு கிடைத்த லக்ஷ்மணன் போன்றவன் பாலு. ஆகையால் தம்பியை அவனால் அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை.
சூர்யா கட்டிலில் கண்களில் நீர் வழிய படுத்து இருந்தான். ஏதோ ஒரு கை அவன் கண்ணீரை துடைப்பதை உணர்ந்தான்.
யாரு என்று கேட்டான்.
நான் தான் சூர்யா லாவண்யா வந்து இருக்கேன். லாவண்யா! எப்படி இருக்க. நல்லா இருக்கியா?
உனக்கு இப்படி இருக்கும்போது நான் இப்படி சூர்யா நல்லா இருக்க முடியும்.
நீ நல்லா இருக்க நான் ஒரு வழி சொல்றேன் கேட்குறியா?
ஹ்ம்ம் சொல்லுங்க சூர்யா கேட்குறேன்.
நமக்கு நிச்சயம் பண்ண அதே தேதியில நீ வேற ஒரு பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு லாவண்யா.
சூர்யா.........! இத சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு.
நான்தான் ஒரு குருடனா போய்ட்டேனே லாவண்யா. என்னை மறந்துடு. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.
இங்க பார் சூர்யா! மறந்துடுன்னு வேணும்னா சொல்லு. வேற கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லாத.
அப்போ நீ என்ன பண்ண போற?
உங்கள ஒண்ணு கேட்கலாமா?
கண் இல்லாத என்கிட்ட இப்ப பொய் என்ன கேட்க போற.
ஒரு சமயம் இந்த விபத்து எனக்கு நடந்து இருந்து, எனக்கு கண் தெரியாம பொய் இருந்த, நீங்க வேற பொண்ண கல்யாணம் பண்ணி இருப்பிங்களா?
இந்த கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடிய வில்லை. அமைதியாக இருந்தான்.
சொல்லுங்க சூர்யா! வேற பொண்ண கல்யாணம் பண்ணிப்பிங்களா?
மாட்டேன். என்னால வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது.
அப்போ என்ன மட்டும் என் சூர்யா கட்டாயப்படுதுற?
நீ நல்லா இருக்கணும். அதுக்காகத்தான் சொல்றேன். வேற கல்யாணம் பண்ணிக்கோ.
சூர்யா! உன்ன மறக்கவும் முடியாது. வேற கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது. மறந்துடுன்னு சொல்றதுக்கு வேணும்னா உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா வேற கல்யாணம் பண்ணிக்கோனு சொல்றதுக்கு இல்ல.
அப்போ! உன் முடிவு தான் என்ன?
தன்ன ஒருவன் பெண் பார்த்துட்டு பொய் அவர் இறந்துவிட்டார்னு தெரிஞ்ச உடனே, தான் சாகுற வரைக்கும் அவரை தன் கணவரா நினச்சி வாழ்ந்தாங்களே திலகவதியார் அவங்கள மாதிரியே நானும் இருக்க போறேன்.
இவை அனைத்தையும் கதவருகில் நின்றுக் கேட்டுக் கொண்டிருந்தான் பாலு. உள்ளே வந்தான்.
டேய் சூர்யா! எத்தனை பொண்ணுங்களுக்குடா வரும் இந்த மாதிரி மனசு. ஏன் டா வேன்னம்னு சொல்ற? ஒரு பொண்ணுக்கு தெரியும்டா தனக்கு வரப்போறவன் எப்படி இருக்கணும்னு. அவங்க உன்மேல உயிரையே வச்சி இருக்காங்க. உனக்கு காலம் பூராவும் கண்ணு தெரியாதுன்னு நீயே முடிவு பண்ணிட்டியா?
டேய்! நீயும் அவ கூட சேர்ந்துட்டு என்னடா பேசுற?
நீ இல்லனா அவங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்றாங்க. இதுல இருந்து தெரியலையா அவங்க உன்மேல எவ்வளவு ப்ரியம் வச்சி இருக்காங்கனு. அதுவும் இல்லாம அவங்க காலம் முழுதும் கல்யாணம் பண்ணிகாம இருக்குறத விட, நீயே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வச்சிக்கோ டா. உனக்கு கண் கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன் என்றுக் கூறி விட்டு சென்று விட்டான்.
சூர்யா ரொம்ப நேரம் யோசித்தான்.
லாவண்யா! உன்ன மாதிரி ஒரு பொண்ணுக் கிடைக்க நான் கொடுத்து வச்சி இருக்கணும். நல்லா இருக்கும்போதே அவன வேண்டாம்னு உதறிட்டுப் போற பொண்ணுங்களுக்கு மத்தியில நீ மட்டும் எவ்வளவு வித்தியாசமா இருக்க தெரியுமா? உன் மனசு யாருக்கும் வராது லாவண்யா. உன்ன புரிஞ்சிக்காம பேசிட்டேன். என்ன மன்னிச்சிடு லாவண்யா என்றான்.
ஒரு நல்லா வாழ்க்கை துணைவி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவளின் மடியில் முகம் புதைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டான் சூர்யா.
முற்றும்.
good story
ReplyDeleteu should be reach a high
really good
நல்ல ஒரு கருத்துள்ள கதை உண்மை அன்புக்கு மத்தியில் சிறு ஊனம் பெரிதல்ல. இடையில் சில் நீண்ட இடை வெளி வருகிறது கவனியுங்கள். வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கு. நட்புடன் நிலாமதி
ReplyDelete