அம்மாவின் செல்லமகளாய்
அப்பாவின் பாசக்குழந்தையாய்
சித்தப்பாவின் குட்டிதேவதையாய்
அத்தையின் சுட்டிப்பெண்ணாய்
பாட்டியின் அன்பையும் அனுபவித்து வளர்ந்தபோது
அம்மாவின் வயிறு வீங்கியது.
அடுத்துப் பெறப்போகும் பிள்ளைக்காக.
அன்னையின் முலைப்பாலை
பகிர்ந்துகொள்ள தங்கை வந்தாள்.
என்மீது அன்புக்காட்டிய சொந்தமெல்லாம்
தங்கைமீது சாய்ந்து விட்டது
அன்னை உள்பட அவள்மீது அன்புக் காட்ட.
ஏனோ என்கோபம் எல்லாம்
முத்தத்திற்கு ஒரு சாக்லேட் கொடுக்கும்
சித்தப்பாவின் மீதும் அல்ல.
வாரியணைத்து முத்தமிடும்
பாட்டியின் மீதும் அல்ல
கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும்
அத்தையின் மீதும் அல்ல
என்னை மார்பின் மீது போட்டுத்தூங்கும்
தந்தையின் மீதும் அல்ல
என்னைக்கருவில் சுமந்து
பாசத்தை பகிர்ந்து கொடுத்த
தாய்மீது மட்டுமே..
தங்கையை கொஞ்சும் போதும்
அவளின் தளர்நடையை ரசிக்கும்போதும்
கைநீட்டி தாயை தூக்கச் சொன்ன
தங்கையை கிழேதள்ளி
என்னைமட்டும் தூக்குஎன்று
அன்னையருகில் சென்றபோது
என்னை அடித்துவிட்டு
அழும்தங்கையை தூக்கி சமாதானப்படுத்தும்போது
இன்னும் கோபம் அதிகமானது அன்னை மீது.
என்னை தமிழிலும் தங்கையை
ஆங்கிலப் பள்ளியிலும் படிக்க வைத்தது
என்னவோ தந்தைதான் என்றாலும்
என் கோபம் எல்லாம் அன்னை மீதுதான்
அளவின்றி எகிறியது.
தந்தையின் ஸ்பரிசம் குறைந்தபோதும்
பாட்டியின் கதைசொல்லும் நேரம் தவறியபோதும்
முத்தங்களை எனக்கும் தங்கைக்கும்
பகிர்ந்துகொடுத்த அன்னையின் மீதுதான்
என் வெறுப்புகள் எல்லாம்.
அங்கே செல்லாதே இங்கே போகாதே
ஆணுடன் பேசாதே இரவில் வெளியே போகாதே
அரட்டை அடிக்காதே என்று கூறும்போது
அன்னையின் மீது உள்ளகோபம் அளவின்றி எகிறியது.
என் தாயே!
நேற்று வரை தவறாக உணர்ந்து இருந்தேன்
என்மீது உனக்குள்ள பாசத்தை.
தாய் அன்பில் மாசு இல்லை
தாய்க்கு நிகருமில்லை என்று
இன்று நானும் இருகுழந்தைகளுக்கு தாயானபோதுதான்
தெரிந்து கொண்டேன் தாயே
என்மீது நீகொண்ட அன்பை....
Comments
Post a Comment